
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் யங் இந்தியா நிறுவனத்தின் 38 சதவீத பங்குகளை சோனியா காந்தியும், 38 சதவீத பங்குகளை ராகுல் காந்தியும் என மொத்தம் 76 சதவீத பங்களை கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் பங்கு பரிமாற்றத்தில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும், ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சம் செலவில் மாற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் யங் இந்தியா நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் நன்கொடைகள் என்கிற போர்வையில், சோனியாவும், ராகுலும் அதிகம் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


மேலும், இந்த நன்கொடை பரிவர்த்தணைகளில் கணிசமான பகுதி தெலங்கானாவில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போதைய எம்.எல்.ஏவும் தற்போதைய முதல்வருமான ரேவந்த் ரெட்டியின் அறிவுறுத்தலின் பேரில், நான்கு காங்கிரஸ் தலைவர்கள் 2022 ஆம் ஆண்டில் யங் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர்.
அதில், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தெலங்கானாவைச் சேர்ந்த கலி அணில் குமார் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாகவும், அதேபோல் தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலி ஷபிர் ரூ. 20 லட்சமும், தெலங்கானா காங்கிரஸ் பொருளாளர் பி.சுதர்ஷன் ரூ. 15 லட்சமும் நன்கொடை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தற்போதைய தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரூ. 25 லட்சத்தை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும், அனைத்து பணப்பரிமாற்றங்களும் ஒரே மாதத்திற்கு நிகழ்ந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் இதேபோல் கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் பன்சால் அறிவுறுத்தலின் பேரில் தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் எம்.பி., ஆகியோர் 2022 ஏப்ரலில் தலா ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மாதத்தில் சிவக்குமார் தொடர்புடைய தேசிய கல்வி அறக்கட்டளையில் இருந்து சுமார் ரூ. 2 கோடி ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இதேபோன்று பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமித் விஜ், கடந்த 2015ம் ஆண்டு மூன்று கட்டங்களாக ரூ. 3.30 கோடி வழங்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நன்கொடைகள் தன்னார்வ பங்களிப்புகள் அல்ல என்றும், மாறாக யங் இந்தியாவுக்கு பணத்தை செலுத்தும் ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாம் எனவும் ED சந்தேகிக்கிறது. இந்த பரிவர்த்தனைகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளை மீறுகின்றனவா என்பதை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணம் செலுத்தப்பட்ட வழிமுறை, நேரம், ஒருங்கிணைப்பு ஆகியவை ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட முயற்சியாக தோன்றுவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும், ஆவணங்கள் தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.