நாடாளுமன்றத்தில் “வாக்குத் திருட்டு” போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவில், “குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், நாடாளுமன்றத்தின் முன் உள்ள முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பிரதமர் மோடி பேசுவதற்குப் பதிலாக, மீண்டும் ஒரு முறை “நாடகம்” நிகழ்ச்சி நடத்தி உள்ளதாக மல்லிகார்ஜூன் கார்க்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கடந்த 11 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஒழுக்கத்தையும், நாடாளுமன்ற அமைப்பு முறைகளையும் மத்திய அரசாங்கம் காலில் போட்டு மிதித்து வந்த நிகழ்வுகளின் பட்டியல் தொடர்ந்து நீண்டு வருகிறது. குறிப்பாக கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மட்டும், குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களுக்குள்ளும், சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்கள், ஜிஎஸ்டி மற்றும் இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் போன்ற மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மூலம் எவ்வாறு அவசரமாக தூக்கி எறிந்தீர்கள் என்பதை முழு நாடும் ஏற்கனவே கண்டித்திருக்கிறது. அதேபோன்று மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் வரை பாஜக அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. S.I.R செயல்பாட்டில் பணிச்சுமை காரணமாக BLOக்கள் தொடர்ந்து தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அதைப்பற்றி விவாதிக்க மறுக்கின்றனர்.
வாக்கு திருட்டு’ உள்ளிட்ட மற்ற முக்கிய பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்க எதிர்க்கட்சி விரும்புகிறது. மேலும் இந்த பிரச்சினையை நாங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம் என்று கார்க்கே தெளிவுபடுத்தியுள்ளார். பாஜக இப்போதாவது தனது திசைதிருப்பும் தந்திரங்களை நிறுத்திவிட்டு, உண்மையான பொதுப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இளைஞர்களுக்கு வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவற்றை கண்டித்து சாமானிய மக்கள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகார ஆணவத்தால் உந்தப்பட்டு நாடகம் ஆடுகிறார்கள்“ என கார்க்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை வரவேற்று பேசிய மல்லிகார்ஜுன் கார்க்கே, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவனும் கிடையாது நான் அனைத்து கட்சியும் சேர்ந்தவன் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் தலைவராக இருந்தபோது ஆற்றிய உரையை உங்களுக்கும் பொருத்தி காட்ட கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார். அரசின் செயல்பாடுகள் குறித்த எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விவாதங்களை எப்போதும் தான் விரும்புவதாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நீங்களும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல அவரது பெயரையே கொண்டிருப்பவர். எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இந்த அவையை நடத்துவீர்கள் என நம்புகிறோம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.


