போதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது- சித்தராமையா
போதிய அளவில் மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “வறட்சி காலகட்டத்தில் இரு மாநிலங்களும் இணைந்து அதை எதிர்க்கொள்ள வேண்டும். இந்த வருடம் உபரி நீரை வெளியிட முடியாது. எங்கள் விவசாயிகளின் தேவைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம். தற்பொழுது எங்களுக்கு மழை சரியாக பெய்யவில்லை. இந்த தடவை கேரளாவிலும் மழை குறைவாக பதிவாகியுள்ளது. குடகு மாவட்டத்திலும் மழை குறைவாக பதிவாகியுள்ளது. இதனால் எங்கள் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. எப்பொழுதும் அதிக நீர் வரத்து இருக்கும்போது அனைத்தையும் தமிழகத்திற்கு விட்டு விடுவோம். இந்த முறை உபரி நீரை வெளியிட முடியாது.
இதனால் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நம் நிலைமையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் விவசாயிகளின் நிலையையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா ஆகவே கடுமையான காலகட்டத்தில் இருவரும் இணைந்து அதை எதிர் கொள்ள வேண்டும்” என்றார்.