கர்நாடகா தேர்தல்- இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரசசாரம் இன்று மாலையுடன் ஓய உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிக்கும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய உள்ள நிலையில் 224 தொகுதிகளிலும் இறுதி கட்ட பிரச்சாரம் கலைக்கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூர் அருகே உள்ள காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளரும், காந்திநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தினேஷ் குண்டு ராவ் அந்தத் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட சுபாஷ் நகர் வார்டில் வீதி வீதியாக மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களை கவர்ந்து இறுதி கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து எடுத்துரைத்து வாக்கு கேட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியே விழா கோலம் பூண்டுள்ளது.