லாலுவின் மனைவி ராப்ரிதேவி நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2004 – 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பணியாற்றியபோது ரயில்வே துறையில் குரூப்-டி பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய, அவர்களுக்கு சொந்தமான நிலங்களை லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது. அதன்படி டெல்லி, பாட்னா காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்த பெரும்பாலான இடங்கள் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள் மற்றும் மகன்களான மிசா பாரதி, ஹேமா யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகிய ஒரு பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் நீதிபதி விஷால் கோக்னே அமர்வில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நடைபெற்ற வருகிறது. ஆனால், நீதிபதி விஷால் கோக்னே அமர்வில் உள்ள வழக்குகளின் விசாரணைகளை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி ராப்ரிதேவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை திட்டமிட்ட எண்ணத்துடன் நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான மனுக்களை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விசாரணை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராப்ரி தேவி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.


