சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை வழக்கில் ஜூன் 20ம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் அமலாக்க துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜூலை 12ம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும் மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இருந்தால் கெஜ்ரிவாலினால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராகவும், சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் கெஜ்ரிவால் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 17ம் தேதி நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.