ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது – பிரதமர் மோடி
சிபிஐ வைரவிழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சாதாரண குடிமகனுக்கு சிபிஐ நம்பிக்கையையும் வலிமையையும் அளித்துள்ளது. நீதிக்கான முத்திரையாக சிபிஐ உருவெடுத்துள்ளதால், சிபிஐ விசாரணை கோரி மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். சிபிஐ போன்ற தொழில்முறை மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது. வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான மோசடிகள் வரை, சிபிஐயின் பணியின் நோக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது, நாட்டை ஊழலற்றதாக மாற்றுவதுதான் சிபிஐயின் முக்கிய பொறுப்பு.

10 ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஊழல்கள் செய்வதில் போட்டி நிலவியது. பெரிய ஊழல்கள் செய்தவர்கள் அச்சமின்றி இருந்தனர். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான செயல்பாட்டை நாம் மேற்கொண்டோம். ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது. முந்தைய அரசாங்கங்கள் மக்களை திருப்திப்படுத்துவதில் மும்முரமாக இருந்தன. ஆனால் இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது” எனக் கூறினார்.
சிபிஐ ஏப்ரல் 1, 1963 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முடிவால் உருவாக்கப்பட்டது.


