மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்டு ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில், பின்னர் அந்த ஒட்டுநரின் குடும்பத்துடன் ஒன்றாக உணவு அருந்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கிழக்கு டெல்லியில் உள்ள கோண்டாலி பகுதியில் ஊபர் நிறுவனத்தின் செயலி மூலம் கார் ஒன்றை புக் செய்து அதில் ஜன்பத் இல்லம் வரை பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான சுனில் உபாத்தியாய் என்பவரிடம் ராகுல்காந்தி உரையாடினார். அப்போது, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சந்திக்கும் சூழல், வருமானம், பணமதிப்பிழப்பு உள்ளிட்டவையால் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும் இந்த பயணத்தின்போது கார் ஓட்டுனர் சுனில் உபாத்தியாய் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசிய ராகுல்காந்தி ஜன்பத் இல்லத்தில் இறங்கிய பிறகு, அவரது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சில பொருட்களை வழங்கினார். தொடர்ந்து ஒட்டுனர் சுனில் உபாத்தியாய் குடும்பத்தினரை உணவகத்தில் சந்தித்து அவர்களோடு உணவு அருந்தி அவர்களது வாழ்வாதாரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, நாடு முழுவதும் சுனில் உபாத்தியாய் போல பல ஓட்டுநர்கள் கைக்கு கிடைக்கும் வருவாய், வாய்க்கு கூட பத்தாத சூழலில் பிழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சேமிப்பு, எதிர்காலத்திற்கான அடித்தளம், திட்டமிடுதல் என எதுவும் இல்லாத சூழலில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில், அம்மாநில அரசுகள் உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்கும் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.