இலங்கையில் தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப்படும்- பிரதமர் மோடி
2 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இடையே நடைபெற்ற ஆலோசனையில், இருநாடுகளுக்கிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரணில் விக்ரமசிங்க உடனான ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பல்வேறு விவகாரங்கள் குறித்து இலங்கை அதிபருடன் விவாதித்தோம். இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடமுண்டு. நாகை- இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படும். பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா இலங்கைக்கு தோளோடு தோள் நின்றது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். இலங்கை- இந்தியா இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இந்தியாவிற்கு வந்தது பெருமையாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள, அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. இலங்கையின் பொருளாதார மீட்புக்காக, நாங்கள் பணிபுரிந்து வருகிறோம், இதில் இந்தியாவின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.