வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து தலைமை நீதிபதி கவாய் அமர்வு உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக மாறிய வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் கடந்த ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு, வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக எந்த ஒரு புதிய நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இவ்வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் புதிதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள பி.ஆர் கவாய் அமர்வுக்கு வழக்கை மாற்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் பதவியேற்றுள்ள நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என மத்திய அரசு தரப்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் தற்போது பிரதான வாதங்களை வைக்கப் போகிறீர்களா? அல்லது இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக வாதங்களை வைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் தற்போது பிரதான கோரிக்கைக்குள் செல்ல வேண்டுமானால், தங்களுக்கு வாதம் வைக்க சற்று அதிக காலம் எடுக்கும் என தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்புக்கு பிரதான விவகாரத்தில் வாதம் வைக்க அதிக நேரம் தேவைப்படும்! அதே வேளையில் இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பாக வாதம் வைப்பதற்கு இரண்டு மணி நேரம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அதற்கு இன்று போதிய காலம் இல்லாததால் வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்து விசாரிக்கலாம் எனவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
மேலும் விரிவான பதில் மனுவில் உள்ள சாராம்சங்களை சுருக்கமாக ஒரு பதில் மனுவாக நீதிமன்றத்தில் வழங்குகிறோம் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அவை இரு தரப்புக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் 130 மனுக்கள் உள்ள நிலையில் அதில் 5 மனுக்களை மட்டுமே பிரதான மனுக்களாக உச்சநீதிமன்றம் கருதுவதாகவும், எனவே பிரதானமாக கருதப்பட்டுள்ள 5 மனுதாரர்கள் மட்டுமே வாதிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். பிற மனுதாரர்கள் இந்த வழக்கில் ஒரு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை இந்த பிரதான 5 பேருக்கு எடுத்துரைக்கலாம் என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை மே 20-ம் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒத்திவைத்ததோடு அதுவரை ஏற்கனவே வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என உத்தரவிட்டார்.
மத்திய அரசுக்கு அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லை – பி.வில்சன் கருத்து