காஷ்மீரில் பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.பஹல்காம் படுகொலைகளின் பின்னணியில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹசிம் முசா, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்–இ–தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்படும் தீவிரவாதியான முசா, ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே லஷ்கரால் அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதற்காகவே பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து முசா, லஷ்கர் – இ – தொய்பா இயக்கத்திற்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவிய 14 உள்ளூர் தொழிலாளர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்த தகவல் வெளியானதாக கூறும் இந்திய புலனாய்வு அதிகாரிகள், கடந்த 2024ல் கந்தர்பால் பயங்கரவாத தாக்குதலும் முசாவிற்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பஹல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அந்நாட்டில் பணியாற்றிவருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலம் ஆகி உள்ளது. காஷ்மீரில் பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
