2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது. இரண்டு கூட்டணி கட்சிகளும் சமபலத்தில் மோதுகிறது. யார் வெற்றிப் பெற்றாலும் பெரும்பான்மை நிரூபிப்பது கடினமானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 140 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஏப்ரல் 9, 2026 தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கே ஆளும் கம்யூனிஸ்ட் தலைமையிலான LDF மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UDF இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அமைந்துள்ள இடதுசாரி முன்னணி (LDF) களம் காண்கிறது. இந்த கூட்டணி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மூன்றாவது முறையாக (Hat-trick) ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், முதல்வர் பினராய் விஜயனின் 10 ஆண்டு கால ஆட்சி எதிர்ப்பு அலை (Anti-incumbency) அவர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது.
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி கடந்த 2025 உள்ளாட்சித் தேர்தல்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றது அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. வி.டி. சதீசன் மற்றும் கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் வலுவான வெற்றியை எதிர்பார்க்கிறது.
யாருக்கு சாதகமாக இருக்கிறது?
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் அரசியல் தரவுகளின்படி போட்டி மிகவும் கடினமானதாக இருக்கிறது. காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் போன்ற வடக்கு மாவட்டங்களில் இடதுசாரிகள் இன்னும் வலுவாக இருந்து வருகிறார்கள். அந்தப்பகுதிகளில் பினராய் விஜயனின் ஆளுமை செல்வாக்குடன் இருக்கிறது.
மலப்புறம், வயநாடு மற்றும் எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் காங்கிரஸ் கூட்டணி செல்வாக்குடன் இருந்து வருகிறது. 2025 நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள தாமதம் ஆகியவை ஆளும் அரசுக்கு எதிராக விவாதிக்கப்படுகின்றன.கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதிருப்தி அடைந்த ஜி. சுதாகரன் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸுடன் கைகோர்த்திருப்பது சில தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கேரளா அரசியலில் பாஜகவின் வாக்கு சதவீதம் மெதுவாக அதிகரித்து வருகிறது. இது சில தொகுதிகளில் மும்முனைப் போட்டியை உருவாக்கி, வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற வாய்ப்புள்ளது.
அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தத் தேர்தல் “பினராயி விஜயன் மீதான மக்கள் தீர்ப்பு” என்று பார்க்கப்படுகிறது. இடதுசாரிகள் தங்களின் கோட்டைகளைத் தக்கவைத்துக் கொண்டால் வரலாறு படைப்பார்கள். மாறாக, கேரளாவின் பாரம்பரியமான “ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம்” என்ற சுழற்சி முறை மீண்டும் திரும்பினால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்.
தற்போதைய நிலையில், UDF கூட்டணிக்கு ஒரு சிறிய முன்னேற்றம் (Edge) இருப்பதாக சில கள ஆய்வுகள் கூறினாலும், இறுதி முடிவை அமைதிப் பெரும்பான்மையினரான நடுநிலை வாக்காளர்களே தீர்மானிப்பார்கள்.
இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இரண்டு கூட்டணி கட்சிகளும் சமபலத்தில் மோதுகிறது. யார் வெற்றிப் பெற்றாலும் பெரும்பான்மை நிரூபிப்பது கடினமானதாக இருக்கும்.
கூட்டணி கட்சிகளின் இறுதிப் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குகள் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
