வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 30 பேர் இன்று ஓரே நாளில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் மேப்பாடி பகுதியில் உள்ள விம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 164 பேர் விம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரே நாளில், அதில் 30 பேர் சிகிச்சை நிறைவு பெற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
மீதமுள்ள நபர்களில் தற்போது 11 பேர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக விம்ஸ் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக அசாமை சேர்ந்த பெண் மருத்துவர் சுக்ருதி என்பவர் மிகவும் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டரில் இருக்கும் நிலையில், அவரை நாளை அசாம் மாநிலத்திற்கு விமானம் மூலம் அழைத்துச்செல்ல உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர். அசாமில் இருந்து வயநாடு பகுதிக்கு விடுமுறைக்காக வந்திருந்த பெண் மருத்துவர் சுக்ருதி, சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்டு தற்போது விம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கண்ணூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமாகிவிட்டதாகவும், கேரளா கண்டிராத ஒரு பேரிடரை தற்போது சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பேரிடரில் இருந்து விரைவில் தாங்கள் ஒன்றுபட்டு மீண்டு வருவோம் என்றும் சுதாகரன் நம்பிகை தெரிவித்தார்.