மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க துணை ராணுவத்தை அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களில் பலர் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை பரிசளிக்கக்கூடிய பணிகளில் உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களுடைய பெயர் நீக்கப்பட்டதாக கூறி நேற்று மேற்கு வங்க மாநில மக்கள் சிலர் மால்டா மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணியில் இருந்த 3 பெண் நீதிபதிகள் மற்றும் 7 நீதித்துறை பணியாளர்களை பல மணி நேரம் முற்றுகையிட்டனர்.
இது குறித்து இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, மேற்கு வங்க மாநில அரசும் அதன் அதிகாரிகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறி உள்ளனர் என கவலை தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவங்கள் நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவது மட்டும் நோக்கம் அல்ல! மாறாக நீதித்துறை அதிகாரத்திற்கு சவால் விடுவது என கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஆட்சேபனை மனுக்கள் மீது நடைபெறும் பணியை தடுப்பதற்காக திட்டமிட்டு நீதிபதிகள் மற்றும் நீதித்துறை பணியாளர்களை முற்றுகையிட்டதாகவே இந்த விவகாரங்களில் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் நேற்றைய தினம் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை பணியாளர்கள் முற்றுகையிட்ட பிறகு அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை ஏன் மேற்குவங்க மாநில அரசு உறுதி செய்யவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதோடு இது குறித்து பதில் அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் ஆட்சேபனை மனுக்கள் மீதான பரிசீலனையில் ஈடுபடும் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டதோடு தங்களுடைய குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் உள்ளது என அச்சம் கொள்ளும் நீதிபதிகள் இல்லத்திற்கும் துணை ராணுவ படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் உள்ள அரசு வளாகத்திற்குள் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்ய வரும் மேற்குவங்க மாநில மக்கள் அதிகபட்சம் மூன்று பேருக்கு மேல் உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் இதனை மேற்கு வங்க காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி & மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
