மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்- தலைவர்கள் வாழ்த்து
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது 70-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
முதல்வர் பிறந்தநாள்- மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், “முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், மு.க.ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தனது இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
”தமிழக மக்களின் தலைவர் மு.க.ஸ்டாலின்”
நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “சூரியனைப் போல விடியலாக ஆட்சி வழிநடத்துவாயாக, சூரியனின் கதிர்களைப் போல மக்களுக்கு சேவை செய்வாயாக, ஒருபுறம் விடியலாகவும், மறுபுறம் அந்தி மயமாகவும் இருக்கலாம், ஆனால் சூரியன் மறைவதில்லை. பூமிக்கு தலைவனாக சூரியன், தமிழக மக்களுக்கு தலைவனாக கருணாநிதியின் மகன். @mkstalin #HBDMKStalin70” என பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குன்றாத நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தைக்கு மகன் பிறந்தநாள் வாழ்த்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “முத்தமிழறிஞர் நீட்சியாக, சிந்தனை-சொல்-செயலில் திராவிட இயக்க கொள்கை தாங்கி, மிசா சிறை-இளைஞரணி-கழகம்-தமிழ்நாடு என அரை நூற்றாண்டுக்கு மேலான பொதுவாழ்வில் மக்கள் பணியாற்றும் தலைவர்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப குழு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு, இனிய 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் தாய் மண்டைக்காடு அன்னை பகவதியின் அருளால் நலம் பல கூட அன்னையை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.