ஒருபுறம் ஆள்குறைப்பு, மறுபுறம் ஒப்பந்தப் பணி! அன்புமணி ராமதாஸ்
ஒருபுறம் ஆள்குறைப்பு, மறுபுறம் ஒப்பந்தப் பணி, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த பத்தாண்டுகளில் 2.7 லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, பொதுத் துறை நிறுவன வேலைவாய்புகளில் 42.50% பணியிடங்கள் ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் சமூகநீதி பலி கொடுக்கப்படுவதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புச் சூழல் 2012-13 முதல் 2021-22 வரையிலான காலத்தில் எவ்வாறு மாறியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பத்தாண்டு காலத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2.70 லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 2012-13ஆம் ஆண்டில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம் 17.30 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. ஆனால், 2021-22ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.60 லட்சமாக குறைந்துவிட்டது. அதேபோல், 2013ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பொதுத்துறை நிறுவன பணியாளர்களில் 19.50 விழுக்காட்டினர் மட்டுமே ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தனர். ஆனால், 2022-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்த அளவு 42.50% ஆக அதிகரித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
மக்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டுமானால், கவுரவமான, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்புகள் தேவை. தனியார்துறை வேலைவாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும், சில துறைகளில் அதிக ஊதியம் வழங்கப்பட்டாலும் கூட கவுரவமான, சமூகப்பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்குவது அரசுத்துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் தான். ஆனால், அரசுத்துறை, பொதுத்துறை வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது மக்களுக்கு கவுரவமான, பணிப்பாதுகாப்புடன் கூடிய வேலைகளை வழங்காது. அதனால் தொழிலாளர்கள் நிறுவனங்களால் சுரண்டப்படுவது அதிகரிக்கும்.
2001-02ஆம் ஆண்டு நில்வரப்படி பொதுத்துறை நிறுவனங்களில் இருந்த நிலையான வேலைகளின் எண்ணிக்கை 19.92 லட்சம் ஆகும். 2012-13ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 13.93 லட்சமாகக் குறைந்து விட்டது. 2021-22ஆம் ஆண்டில் பொதுத்துறையில் உள்ள நிலையான வேலைகளின் எண்ணிக்கை 8.40 லட்சமாகக் குறைந்து விட்டது. அதாவது, பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பு கடந்த 20 ஆண்டுகளில் 58% குறைந்து விட்டது. அதேபோல், ஓய்வுக்கு பிந்தைய காலத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிலையான வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு, எந்த உரிமையும் இல்லாத ஒப்பந்தப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது எந்த வகையிலும் சமூகநீதியைக் காக்காது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற தத்துவத்தை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வந்ததன் காரணமே, காலம் காலமாக அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்த மக்கள் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தின் பயனாக அரசு அல்லது பொதுத்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால், அதனால் அவர்களின் சமூகநிலை உயரும்; அவர்களின் வாழ்க்கை கண்ணியமானதாக மாறும் என்பது தான். 2001-02ஆம் ஆண்டில் இருந்த அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்திருந்தால் அது சமூக முன்னேற்றத்திற்கு உதவி செய்திருந்திருக்கும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அரசு, பொதுத்துறை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாக குறைந்து விட்ட நிலையில் சமூக முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமாகும்?
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறையும் போது போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டால் எந்த பயனும் கிடைக்காது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் இல்லாத போது அடித்தட்டு மக்களுக்கு சமூக முன்னேற்றம் ஏற்படாது. தனியார் நிறுவன வேலைகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அதனால், அந்த மக்கள் வேலைவாய்ப்புக்காக அரசு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், அவற்றிலும் பணிகளின் எண்ணிக்கையை குறைப்பது சிறிதும் நியாயமல்ல.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் தனித்த காரணிகள் அல்ல. அவை சமூக முன்னேற்றத்திற்கான காரணிகள். இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்; ஒப்பந்த மற்றும் தற்காலிக பணிகளை மீண்டும் நிலையான பணிகளாக மாற்ற வேண்டும். மாநில அரசுகளும் அவ்வாறே செய்யும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.