அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ்
அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவகங்கை அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் சாலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்ததன் பேரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓ.பன்னீசெல்வம் அணி கழக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், “அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும். தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்.
சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்வரன் என்ற இளைஞர், பழனிசாமியை பார்த்ததும் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தும் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்க்கின்றனர்” எனக் கூறினார்.