spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று மோடி நினைக்கிறார் - வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று மோடி நினைக்கிறார் – வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

-

- Advertisement -

காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று நினைத்து வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே பிரதமர் மோடி தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கனிமவளங்கள் திருத்தச்சட்டம் 2023 (THE MINES AND MINERALS (DEVELOPMENT AND REGULATION) AMENDMENT BILL, 2023) மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு 28 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்களில் மக்களவை போர்க்களம் போல இருந்தது. இந்தச் சட்டம் தேசத்தின் கனிமவளங்களைப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கக் கொண்டுவரப்படுகின்ற சட்டம். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிற சட்டம் இதனை ஏற்க முடியாது என அவையின் மையப்பகுதிக்கு மட்டுமல்ல அவைத்தலைவரின் இருக்கைக்கே சென்று முழக்கமிட்டு எங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

we-r-hiring

எங்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தனக்கு இருந்த மிருகப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாங்கள் சொல்லுகிற எதையும் கேட்காமல் சட்டத்தை நிறைவேற்றியது மோடி அரசு. இந்தச் சட்டத்தின்படி வேதாந்தாவின் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை டங்க்ஸ்டன் கனிமத்தை எடுக்க அரிட்டாபட்டிக்கு அனுப்பிவைக்கும் திருப்பணியைச் செய்தது மோடி அரசு.

ஆனால் அரிட்டாபட்டியிலும், மேலூரிலும் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு வந்தவுடன் இன்று வேகவேகமாக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் ஒன்றிய கனிமவளங்கள் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி அவர்களுக்குக் கடிதம் எழுதி அவர் முடிவைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார் எனவும் விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாட்டையும் பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

திரு. அண்ணாமலை அவர்களே இந்தச் சட்டம் மக்களவையில் நிறைவேறிய பொழுது அன்றைய தினம் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய எங்களின் முழக்கத்தை காணொளியில் கேளுங்கள். “அதானிக்கான சட்டத்தைத் திரும்பப்பெறு” என்று அவை அதிர முழங்கினோம்.

அதானியின் நலனுக்கு எதிராக எதையும் செய்யாத பிரதமரால் இந்தச் சட்டம் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. அன்று மக்களவையில் ஐம்பது பேரின் முழக்கம் இன்று அரிட்டாபட்டியில் பல்லாயிரம் பேரின் முழக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அன்று மூர்க்கத்தனமாகச் சட்டம் கொண்டு வந்த நீங்கள் இன்று மக்கள் எதிர்ப்பைக் கண்டு வேகவேகமாகப் பின்வாங்கக் கடிதம் எழுதுகிறீர்கள். அன்று உங்களை ஆதரிப்பதை மட்டுமே அரசியலாகக் கொண்டிருந்த திரு. எடப்பாடி அவர்கள் “இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என இந்தியா கூட்டணியைப் பார்த்து இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாகக் கேட்கிறார்.

திரு. எடப்பாடி அவர்களே இன்று நீங்கள் பேசியதை விட ஆயிரம் மடங்கு ஆவேசத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மோடி ஆட்சியின் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாடளுமன்றத்தில் கூண்டுப் பறவையாக குறுகிக் கிடந்தீர்கள். சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்யும் உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை.

உங்களின் புதிய அவதாரம் கடந்தகால பாவங்களை இல்லாமல் செய்துவிடாது.

காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் பிரதமர் மோடியின் விசுவாசத்திற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

MUST READ