பாஜக, அமமுக கூட்டணியா?- டிடிவி தினகரன் பதில்
எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றாலும் நாங்கள் சேர மாட்டோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்லக் கூடாது என 90% அமமுகவினர் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றாலும் நாங்கள் சேர மாட்டோம். ஜாதி, சமய வேறுபாடுகளின்றி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது. தனி நபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு. நாடாளுமன்ற தேர்தலுக்காக தயார் செய்துகொண்டிருக்கிறோம். கூட்டணி சரியாக அமையவில்லை என்றால் தனித்து போட்டியிட தயார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகா எப்போதுமே கடுமையாக நடந்து கொள்ளும், கர்நாடகா வன்முறையை கையில் எடுக்கும். திமுக மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பயந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில், மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக அமமுக வளரும். எங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். திமுக அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருமே வஞ்சிக்கப்படுகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.