திமுகவோடு கை கோர்க்க தயார்- அண்ணாமலை அதிரடி
மதுக்கடையை ஒழிப்போம் என்றால் திமுகவோடு கை கோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மண் என் மக்கள் யாத்திரையில் உரையாற்றிய அண்ணாமலை, “9 ஆண்டுகளில் நமது நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் மது விற்பனை, அரிவாள் கலாச்சாரம், கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்று கூறினால் நாங்கள் திமுகவோடு கை கோர்க்க தயார், ஆனால் சனாதனக் கொள்கையை ஒழிக்க நினைத்தால் சேரமாட்டோம்.
அனைவரும் சமம் என நான் நினைக்கிறேன். அதற்காக நான் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய வேண்டும் என எதிர்பார்க்ககூடாது. அது அவருடைய கடமை, அதேபோல் அவரை கூட்டிவந்து நான் செய்யும் விவசாயத்தை செய்ய வேண்டும் என சொல்லமாட்டேன். அது என் கடமை. விவசாயம் செய்பவரை கோவிலில் பூஜை செய்ய சொல்வது தவறு. அவரவர் வேலையை அவரவர் தான பார்க்க வேண்டும். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என உதயநிதி கூறுகிறார். முடிந்தால் தனது தாயார் கோயிலுக்கு போவதை உதயநிதி தடுத்து நிறுத்திக்காட்டட்டும். நான் சவாலே விடுகிறேன். தனது தாய் கோயிலுக்கு போவதை உதயநிதி தடுத்துக்காட்டட்டும். அவர் காலையில் ஒரு கோவிலும், மாலை ஒரு கோவிலும் இருக்கிறார்” என்றார்.