தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் சபதம் எடுத்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து நாளை முதல் பா.ஜ.க-வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள். அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு. இதற்காக நாளை காலை கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளேன்.

அண்ணாமலை பல்கலைக்கழக வன்கொடுமையில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ள குற்றவாளி தி.மு.க வில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களோடு அவர் புகைப்படம் எடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார். தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதில் இருந்து செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து தி.மு.க விற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக அவர், ‘‘எஃப்ஐஆர் லீக்கானது எப்படி..? கட்சி பொறுப்பில் இருப்பதால் மரியாதையாக பேசுறேன். எஃப்ஐஆரை படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது. அந்த குடும்பத்தையே நாசம் செய்துட்டீங்க. வீதிக்கு தனி மனிதனா வந்தா வேற மாதிரி இருக்கும்’’என ஆவேசப்பட்டு இருந்தார் அண்ணாமலை.


