நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகை பாலியல் வழக்கில் ஆஜராக இன்று சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் சீமான் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த சம்மன் போலீஸார் முன்பே கிழித்து எறியப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது குறித்த புகார் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சீமான் மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ’பலாத்கார புகார் என்பதால் இது தீவிரமானது; விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீசாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் நிலையில் அவரிடம் ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு சீமானும் அவரது மனைவி கயல்விழியும் நேரில் வருவார்கள் என்று தம்பிகள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள்.
ஆனால், இன்று கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் சீமானின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், சீமான் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; வேறு ஒருநாளில் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒட்டப்பட்ட சம்மனை கயல்விழி கூறியதன் அடிப்படையில் சீமானின் ஆதரவாளர் கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.