Homeசெய்திகள்அரசியல்நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலை

-

நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலை

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக பிரச்சார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “காசிக்கு செல்ல முடியாதவர்கள் சிவகாசி சிவனை வழிபடலாம். சுயம்பு போல குட்டி ஜப்பானாக சிவகாசி உருவெடுத்துள்ளது. இங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் 90% பட்டாசுகளும், தீப்பெட்டி தொழிற்சாலையில் 70% தீப்பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு, அச்சகங்களும் என ஒரு மைய புள்ளியாக திகழ்கிறது. பீனிக்ஸ் பறவை போல இங்கு உள்ளவர்கள் உழைத்து பெரிய நகரமாக சிவகாசி உருவாகி சரித்திரம் படைத்துள்ளது.

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க சீன பட்டாசுகளுக்கு தடையை ஏற்படுத்தியது மோடி அரசு. அதேபோன்று தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டருக்கு தடை செய்தது ஒன்றிய அரசு. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இல்லாவிடில், சிவகாசி பட்டாசு தொழில் வளர்ந்து இருக்காது. சீன பட்டாசு இறக்குமதியாகி, உச்சநீதிமன்றத்தில் சிவகாசி பட்டாசுக்கு தடை வந்து இருக்கும். 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறை மத்தியில் ஆட்சிக்கு வர இந்த பாதயாத்திரை மூலமாக மக்களை கேட்க வந்துள்ளோம்.

பட்டாசு விற்பனைக்கு தடை போடச் சொன்னவர் தமிழக அமைச்சர் துரைமுருகன். பட்டாசு இல்லை என்றால் நமது கலாச்சாரம் இல்லை, பாரம்பரியம் இல்லை. விடுமுறை தினங்களில் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் பட்டாசுகள் வெடிப்பதன் மூலமாக ஏற்படும் புகை மூட்டத்தை அதன் அளவு எவ்வளவு என்பதை கணக்கு பார்க்க மாட்டார்கள். அதேபோன்று தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. புகை மூட்டத்தின் அளவையும் கணக்கு பார்க்கக்கூடாது. அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு பட்டாசு குறித்து நாம் தான் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். தற்போது ஸ்டிக்கர் அரசாக திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 400 உறுப்பினர்களுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். 2028-ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

சிவகாசிக்கும்- தென்காசிக்கும்- காசிக்கும் தமிழ் சங்கம் என உறவு ஏற்படுத்தி கொண்டாடியவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழையும், தமிழனின் பெருமையையும் ஐநா சபையில் இருந்து அனைத்து இடங்களிலும் பறைசாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி. சோழர்கால செங்கோலை பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைத்துப் பெருமைப்படுத்தவர் நரேந்திர மோடி. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. 40 சதவீத மதுபான ஆலைகளை திமுகவினரே நடத்துகின்றனர். டாஸ்மாக் மது பிரியர்களுக்கு நடக்கவில்லை. பணப் பிரியர்களுக்காக நடக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும்- குடிக்குமான தேர்தல். திராவிட மாடல் ஆட்சியா? தேசிய மடல் ஆட்சியா? சாமானிய அரசியல்வாதியா? வாரிசு அரசியலா? என்பதற்கான தேர்தல்” என்றார்.

MUST READ