அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், நேற்று டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினோம். ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ‘B’ டீமாக செயல்படுகிறார். எங்களுக்கும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. தகராறு இருந்தால் ஈரோட்டில் எப்படி வந்து பிரச்சாரம் செய்திருப்பார். எங்கள் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி தொடரும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதுபோல் வெளியான ஆடியோ பற்றி விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறினோம். ஆடியோ உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து முறையான விசாரணையை நடத்த வேண்டும்.


அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். அதிமுகவும் சின்னமும் எங்கள் பக்கம் தான் உள்ளது. அதிமுக அடிமைக் கட்சி இல்லை. திட்டமிட்டு அதிமுக- பாஜகவை பிரிக்க நினைக்கிறார்கள். அதிமுக- பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவது போன்று தவறான கேள்வி கேட்டார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது” எனக் கூறினார்.


