- Advertisement -
அண்ணாமலை பாஜக வெற்றிக்கு ஆபத்து- எம்பி மாணிக்கம் தாகூர்
கர்நாடக தேர்தலில் 40 சதவீத லஞ்ச ஊழலில் பாஜக ஆட்சி புரிகிறது, இதனால் அம் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கல்லூரி படிப்பை முடித்த 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “தென் தமிழகத்தில் முக்கிய நகரமாக திகழக்கூடிய மதுரை மாவட்டத்தில், ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது சிறப்பான திட்டம், திட்ட பணிகளுக்கான நிதியை ஒன்றிய அரசு பாரபட்சம் இன்றி கொடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தை மோடி அரசு வஞ்சித்து வரும் நிலையில், தமிழக அரசின் திட்டங்களை எல்லாம் தங்களுடைய திட்டம் என ஸ்டிக்கர் போட்டு ஒட்டிக்கொண்டு மோடி அரசு செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் களங்கத்தை விளைவிக்க கூடிய அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவரால் கர்நாடக தேர்தலில் பாஜக மிக பெரும் தோல்வியை சந்திக்கும். அம்மாநிலத்தில் 40 சதவீதம் லஞ்ச ஊழல் பெற்று பாஜக ஆட்சி புரிகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இது குறித்து பேசப்படும். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்” என்றார்.