சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், தற்போதைய திமுக மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார் தலைமையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சிவகாசியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சரும், சிவகாசி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சிவகாசிக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தனியார் விடுதியில் வைத்து இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயக்குமாருடன் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமாரன், உத்தமபாளையம் முன்னாள் நகர செயலாளர் சுல்தான் இப்ராஹிம், திமுக கழக வழக்கறிஞர் அணி ராஜா சந்திரமோகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அருண் அரவிந்த் உள்ளிட்ட திமுகவைச் சார்ந்தவர்கள் அதிமுவில் இணைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாரம்பரிய திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவன் நான், முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது மாநில பொறுப்பிலும் இருக்கும் நிலையில் தற்போதுள்ள திமுகவின் செயல்பாடு நிர்வாகிகளை மதிப்பதில்லை.
கட்சியை சேர்ந்த நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிக்காத தலைவராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இருப்பதால் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளேன். திமுகவில் உழைப்பவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. 2026-சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றியை தேடி தர தொடர்ந்து அயராது உழைப்போம். அதிமுகவின் கோட்டையாக தேனி மாவட்டத்தை உருவாக்குவதே எங்களது கொள்கை. திமுகவில் ஓபிஎஸ்ஸை கடந்து யார் வந்தாலும் அதிமுகவில் எங்களது பணி சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
