விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலையில் உள்ள சுற்றுலாத் துறை இடத்தை அரண்மனை வீடாக மாற்றிய முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சதாம் உசேனுடன் ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் ஒப்பிட்டார்.
இதுகுறித்து, ”ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ‘தான் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார் என்று நினைத்தார்’. இதனால், அவர் அரண்மனையைக் கட்டத் தூண்டப்பட்டார். இறுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அழகிய கடற்கரைக் காட்சியை இழக்கச் செய்தார் .
ஜெகன் மோகன் ரெட்டி, தான் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்று நம்பி, ஆந்திராவின் சதாம் உசேனாக நினைத்து, அதை ஒரு பெரிய அரண்மனையாக மாற்றினார். அவர் மூன்று பிரமாண்டமான கட்டமைப்புகளைக் கட்டினார். ஒன்று தனக்கெனவும், இரண்டு மகள்களுக்காகவும், மூன்றாவது மனைவிக்காக ஒரு சிறப்பு முகாம் அலுவலகத்துடனும் கட்டியுள்ளார்” என்று லோகேஷ் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேன் அழகான அரண்மனைகளைக் கட்டுவதற்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிப்பதற்கும் பெயர் பெற்றவர். விஜயவாடா அருகே ஒரு ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையைத் திறந்து வைக்கும் போது லோகேஷ் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த அரண்மனை கட்டுமானங்களில் பெரிய அரங்குகள், பிரம்மாண்டமான அறைகள், விலையுயர்ந்த இத்தாலிய பளிங்கு, ஆடம்பரமான பொருட்களுடன் அனைத்தும் மக்கள் பணத்தால் செலவிடப்பட்டுள்ளன. கூடுதலாக, ஜெகன் மோகன் ரெட்டி எப்போதும் பயத்தில் வாழ்ந்ததால், அவரது 1,000 பாதுகாப்புப் பணியாளர்களுக்காக ஒரு பெரிய வீடு கட்டப்பட்டது என்று லோகேஷ் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் நாரா லோகேஷ் சொன்ன தகவலின்படி, ஆந்திரப் பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் அந்த அரண்மனைக்கு ரூ.500 கோடி செலவிட்டுள்ளது. அதன் கட்டுமானத்திற்காக ஒரு அழகான மலையை வெட்டியதற்காக சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது. அபராதத்துடன், மொத்த செலவு ரூ.700 கோடியை எட்டியுள்ளது என்று லோகேஷ் கூறினார்.
“அனைத்தும் நான்கு பேருக்கு மட்டுமே, அதே நேரத்தில் அவரது ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாரும், சகோதரியும் குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட இவ்வளவு பெரிய அரண்மனை இல்லை,” என்று அவர் கூறினார்.