நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து வழக்கை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு சீமான் தரப்பினருக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ‘இப்போதுதான் இடைக் காலத் தடை கிடைத்திருக்கிறது. விரைவில் வழக்கை உடைத்து விடுவோம்’ என நம்பிக்கையோடு தெரிவித்து வருகிறார் சீமான்.

அவளிடம் என்ன பேசுவது..? சமரசமோ, செட்டில்மென்ட் என்ற பேச்சுக்கோ இடமில்லை என மறுத்துள்ள சீமான், திரைமறைவாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் சீமான் தரப்பில் அவரது உறவினர் லூயிஸ், விஜயலட்சுமியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதும் அம்பலமாகி உள்ளது.
அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் உடைந்து போன குரலோடு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி. ” நான் கேவலப்பட்டு விட்டேன். இனிமேல் என்னால் போராட முடியாது. எனக்காக உச்ச நீதிமன்றத்துல குரல் கொடுக்க யாருமே இல்லையே. என்னை கைவிட்டு விட்டார்கள். இதுதான் நான் வெளியிடும் கடைசி வீடியோ’ என விம்மி வெடித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மே 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு காவல்துறையினரும், நடிகை விஜயலட்சுமியும் இந்தழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காவல்துறையினர் அதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கு உள்ளனர். தங்களது முதற்கட்ட விசாரணையில் சீமானுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் பதில் மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், மனம் நொந்து போயிருக்கும் விஜயலட்சுமியை தமிழ்நாட்டில் இருந்து சீமான் எதிர்ப்பாளர்கள் போனில் அழைத்தும், நேரில் சென்று சந்தித்தும் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
விஜயலட்சுமியிடம், ”நீங்கள் இப்போதுதான் தைரியமாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கொடுத்த தடையை உடைக்க தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. அடுத்த விசாரணையின்போது உங்களுக்காக திறமையான வழக்கறிஞரை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் தயங்காதீர்கள். இத்தனை ஆண்டுகளாக போராடிவிட்டு, இப்போது மனம் மாறி விடாதீர்கள். உங்களைப்போய் பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்திய சீமானுக்கு பயந்து கொண்டு பின் வாங்கலாமா? உங்களது கண்ணீருக்கும், கஷ்டத்துக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்” என விஜயலட்சுமியிடம் தைரியம் கொடுத்து பேசி இருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் விஜயலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் தன் தரப்பில் வழக்கை நடத்த முன்வருவார் என்று சீமானின் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தடையை உடைத்து, விசாரணையை மீண்டும் தொடர தமிழக அரசுத் தரப்பில் வழக்கறிஞர்களை அமர்த்தவும் ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.