முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் நீதிபதி ஓகா, இன்று தீர்ப்பை அறிவிக்கும் போது அமலாக்கத்துறையை கடுமையாக
விமர்சனம் செய்தார். அதில்., ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது. ஜாமீனும் கொடுக்க கூடாது, விசாரணையும் தாமதம் செய்வோம் என்று சொல்வது சரியாக இருக்காது . இரண்டிற்கும் நீங்கள் ஆசைப்பட முடியாது என்று அமலாக்கத்துறை தலையில் கொட்டு வைத்துள்ளனர்.
நாங்கள் நஜீப் என்பவரின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் சிலரின் பிற தீர்ப்புகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். ஒருவருக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கிறீர்கள், ஜாமீன் கொடுப்பதை எதிர்க்கிறீர்கள். அதே சமயம் விசாரணையையும் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதை எல்லாம் கருத்திக்கொண்டு.. நாங்கள் நஜீப் வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படியில் ஜாமீன் வழங்கி உள்ளோம்.
மத்திய அரசுக்கு எதிராக கே. ஏ. நஜீப் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், 1967 (‘யுஏபிஏ’) சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (‘யுஏபிஏ’) கீழ் குற்றம் சாட்டப்பட்ட கே. ஏ. நஜீப்பிறகு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் ஜாமீன் வழங்குவதில் உள்ள தயக்கத்தை காட்ட கூடாது.
அவருக்கு எதிராக விசாரணை செய்யவில்லை. விசாரணை தாமதம் செய்கிறீர்கள். விசாரணை தாமதம் ஆகும் போது ஜாமீனையும் மறுக்க கூடாது, ஜாமீனை வழங்கியே ஆக வேண்டும். ஒருவரின் விசாரணை தாமதம் ஆனால் ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கே.ஏ.நஜீப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர். 2010 ஆம் ஆண்டு ஒரு மலையாளப் பேராசிரியரின் கையை ஒரு கும்பல் வெட்டிய வழக்கில் கைதான நிலையில் அவருக்கு ஜாமீனும் இல்லாமல் விசாரணையும் செய்யாமல் இருந்ததை குறிப்பிட்டு நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர். இந்த தீர்ப்பு இன்று செந்தில் பாலாஜி வழக்கில் பயன்படுத்தப்பட்டது.
இது போக நேற்று முன்தினம் பிஎம்எல்ஏ வழக்கில் இதேபோன்று ஒரு ஜாமீன் வழங்கப்பட்டது. இதுவும் கூட செந்தில் பாலாஜிக்கு சாதகமாக மாறி உள்ளது.பணமோசடி வழக்கில் சத்தீஸ்கர் மாநில முதல்வரின் அலுவலக முன்னாள் துணை செயலாளர் சவுமியா சவுராசியாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. சத்தீஸ்கர் மாநில சிவில் சர்வீசஸின் முன்னாள் அதிகாரியான சௌராசியா, முதல்வர் பூபேஷ் பாகேலின் அலுவலகத்தில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு, சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) பணிபுரிந்து வந்தார்.
அவர் நிலக்கரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று இவருக்கு ஜாமீன் வழங்கியது. செந்தில் பாலாஜி கைதான அதே பிஎம்எல்ஏ வழக்கில் இவர் கைதானார். மனுதாரர் ஏற்கனவே 1 வருடம் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து விட்டார் என்பதையும், சக குற்றவாளி வழக்கமான/இடைக்கால ஜாமீனில் வெளியே வந்திருப்பதையும் கருத்தில் கொண்டு, விசாரணை நடக்காமல் தாமதம் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குகிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதுவும் கூட இன்று செந்தில் பாலாஜிக்கு சாதகமாக மாறி உள்ளது.