அண்ணாமலை மீது அவதூறு வழக்கு- டி.ஆர்.பாலு அதிரடி
திமுக தலைவர் மிகப்பெரிய சவால்களை சந்தித்துகொண்டும் அச்சமில்லாமல் முறைப்படி மக்கள் பணியாற்றுகிறார் என திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பம்மலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர்.பாலு, “திமுக தலைவர் மிகபெரிய சவால்களை சந்தித்துகொண்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை முறைப்படி யாருக்கும், அச்சப்படாமல் பணி செய்து வருகிறார். அதுபோல் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு துவக்கமாக அரசு சார்பில் 1000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை, மதுரையில் மிக பெரிய நூலகம், அழகிய கலை நயத்துடன் கூடிய மணிமண்டபம் என பல்வேறு தொடர் நிகழ்சிகளுடன் நூற்றாண்டு துவங்கி ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
10 ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளதாக தன் மீது அவதூறு தகவல் வெளியானது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட தகவல் வெப்சைட்டில் உள்ளது, அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம், அதனை விடுத்து கூடுதலாக ஒரு செண்ட் இடம் கூட இல்லை, சூடு சுரணை மானம் ரோஷம் இருந்தால் களத்தில் சந்திக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதற்கு முதலில் 48 மணிநேரம் கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கினோம். அதற்கு பதில் இல்லை. அண்ணாமலை மீது 8ம் தேதி சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் முதலில் கிரிமினல் வழக்கும், அதனை தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்கவுள்ளேன். நான் திறந்த புத்தகமாக உள்ளேன், என்மீது சேற்றை வாரி இறைத்துள்ளார். அவர் பெரிய அரசில் பிரமுகர் இல்லை என்றாலும் அவர் சாந்த தேசிய கட்சி என்பதால் விளக்கம் அளித்துள்ளேன் என்பதை மக்கள் முன்பாக தெரிவித்துள்ளேன்” என தெரிவித்தார்.