பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் இடம் நாடாளுமன்றம் ஆகும். இதற்கு கட்சிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகளை அரசியல் சாசனத்தின்படி பரிசீலனை செய்து பதிலுரை தர வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் அளித்த பேட்டியில், ”ஜனநாயகத்தின் மீது பாஜகவிற்கு துளியும் நம்பிக்கை இல்லை என்பதால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க பாஜக மறுக்கிறது. பிரதமர் மோடி அவைக்கு வருவதுமில்லை எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை. குறுகிய கால விவாதம் மறந்து போய்விட்டது. கவன ஈர்ப்பு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கவும் முறையிடவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 300 பேர் செல்லயிருந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பாகவே காவல்துறையினர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்துவிட்டனர். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் இருந்த போது இந்த நேரத்தை பயன்படுத்தி பாஜக அரசு அவர்களுக்கு சாதகமான மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

ஒரு குடிமகன் தனக்கேற்ற ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படுவதில்லை. தொடர்ந்து மக்களின் பிரச்சினைக்காக போராடிவரும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஔவைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் என கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நியாயத்திற்காகவும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தவே எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர். முறையான தேர்தலை நடத்துவதற்காக தான் அரசியல் சாசனம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையமே இதுபோன்று முறை கேட்டில் ஈடுபட்டால் யாரிடம் சென்று முறையிடுவது? நாட்டு மக்களிடம் தான் இதனை கொண்டு செல்ல வேண்டும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பாகவே ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்விகளை மல்லிகார்ஜுன கார்கே எழுப்பிய போது, அதற்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அவரின் பேச்சும் புறக்கணிக்கப்பட்டது. இதனை கண்டித்து அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் எந்த உபயோகமும் இல்லை என்பதால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு அடையாளமாக வெளிநடப்பு செய்தோம். மல்லிகார்ஜுன் கார்கே, டி.ஆர்.பாலு, சரத் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களை கூட அனுமதிக்கவில்லை. மாறாக அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டோம். எல்லோரையும் பெயர்களை குறித்துக்கொண்டு விடுவித்தார்கள். வேடிக்கையும் விவாதமும் விசித்திரங்களும் இங்கு நடைபெற்று வருகிறது.
ஜனநாயகத்தின் மீதும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீதும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளதால் தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட சென்றோம். கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் மூலம் தான் தேர்தல் ஆணையத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் திருத்த தீவிர பட்டியல் மூலம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முன்பு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள்” என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.