திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலை
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது. திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். மத்திய அரசை குறை சொல்வதை மட்டுமே தமிழக அரசு தொடர்ந்து செய்துவருகிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என சபதம் எடுத்துள்ளோம்.
பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம் உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும். வெளிநாடுகளில் திமுகவினரின் கருப்புப் பணம்தான் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை பற்றி பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தகுதியில்லை. திமுகவின் பெரும்பாலான அமைச்சர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. பிரதமர் என்ன சொன்னார் என்று புரியாமலேயே திமுகவினர் விமர்சித்துவருகின்றனர்” எனக் கூறினார்.