
கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன்முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் – 3டி லேசர் ஸ்கேனர் அளவீட்டு கருவி உதவியுடன் 12 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை தொடங்கியுள்ளனர்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் உள்ளூர் போலீசார் மற்றும் எஸ் ஐ டி குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தி வரும் நிலையில், முதல் கட்ட விசாரணையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணை நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்ட விசாரணை நேற்று தொடங்கிய நிலையில், பல்வேறு நபர்களுக்கு சிபிஐ கூடுதல் எஸ்.பி முகேஷ் குமார் அனுப்பிய சம்மன் அடிப்படையில் இன்று காலை கரூர் சுற்றுலா மாளிகையில் அப்பகுதி பொதுமக்கள், கடை உரிமையாளர், வீடியோகிராபர் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகினர்.
சாட்சிய விசாரணை முடிவடைந்த நிலையில் கரூர் சம்பவம் நடந்து 34 நாட்கள் கழித்து முதன் முறையாக சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் தற்போது விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். சிபிஐ SP பிரவீன் குமார் தலைமையிலான 12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அப்பகுதியில் விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.
விசாரணைக்கு வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் 3d லேசர்ஸ் ஸ்கேனர் அளவீட்டு கருவி கொண்டு குற்றம் நடந்த இடத்தில் அளவீடு செய்யும் பணியை தொடங்கி இருக்கின்றனர். இந்த லேசர் ஸ்கேனர் அளவீட்டு கருவியானது குற்றம் நடந்த இடத்தையும், நேரத்தையும் துல்லியமாக கணக்கிடும் வகையில் விசாரணைக்கு உதவும் என்று கூறப்படுகிறது


