spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவ சிகிச்சை மீதே சந்தேகம்! இதய அடைப்பை போலியாக காட்ட முடியுமா?

மருத்துவ சிகிச்சை மீதே சந்தேகம்! இதய அடைப்பை போலியாக காட்ட முடியுமா?

-

- Advertisement -

மருத்துவ சிகிச்சை மீதே சந்தேகம்! இதய அடைப்பை போலியாக காட்ட முடியுமா?

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்தில் மூன்று நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைச் செய்தனர். அதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்களும் அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையைச் செய்ய பரிந்துரைச் செய்திருந்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்கோரி, அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து, செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

we-r-hiring

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது தவறு என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதற்கு அமலாக்கத்துறை வேண்டுமானால் உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆட்கொண்ர்வு மனுக்களை கையாள்வதில் உயர்நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரிதான் என்றனர். மேலும் தனியார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியை மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவால் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் நாட்கள் காவலில் இருக்கும் நாட்களாக கருதப்படுமா என உயர்நீதிமன்ற உத்தரவு வரும்வரை காத்திருக்கவும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்றம் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட பிறகு காவலில் எடுக்க மனு தாக்கல் செய்தது ஏன்? என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறிதான் என அமலாக்கத்துறை வாதம் செய்தது. இதற்கு இதய அடைப்புகளை போலியாக எப்படி காட்ட முடியும்? என செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

இதற்கு இதய அடைப்பு உள்ளதா? இல்லையா? என்பதை நாங்கள் கூறவில்லை, முதல் 15 நாட்கள் கடந்துவிடுமோ என்பதுதான் எங்கள் கவலை என அமலாக்கத்துறை தெரிவித்தது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்து அமலாக்கத்துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்தது. வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

MUST READ