தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையா? ஈபிஎஸ் நச் கேள்வி
மகளிர் உரிமைத்தொகையை பெற எதன் அடிப்படையில் தகுதி நிர்ணயம்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்குவந்துவிட்டு இப்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ரூ.1000 வழங்குவோம் என அந்தர்பல்டி அடித்திருக்கிறது திமுக. எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள்? ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றிய பட்ஜெட் இது! 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 23 மாத கால ஆட்சியில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை மற்றும் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன். அதிமுக ஆட்சியில் வருவாய் குறைவாக இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டோம்.

மக்களை ஏமாற்றும் வகையில் இதுவொரு மின்மினிப் பூச்சி பட்ஜெட்டாக உள்ளது. ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கியதன் மூலம் சுமார் ஒரு கோடி பெண்கள்தான் பயனடைவார்கள். நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். இது கானல் நீர் பட்ஜெட், இதனால் மக்களின் தாகத்தை தீர்க்க முடியாது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் 13 கொலை நடந்துள்ளது. நிதி நிலையை சரிசெய்ய திமுக அரசு பன்னாட்டு அறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இதுவரை அவர்கள் என்னென்ன பரிந்துரைகள் அளித்துள்ளனர் ? அதில் எதையெதை அரசு செயல்படுத்தியது ? அதன் மூலம் எவ்வளவு வருவாய் வந்தது ? என்ற தகவலும் பட்ஜெட்டிலும் இல்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.