
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது என திமுக அரசை அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது.
இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


