செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை – தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி பெற்ற பிருந்தா ஏஜென்சி என்னும் உரக்கடையை நடத்தி வருகிறார். இவரிடம் பல ஆண்டுகளாக உரம் வாங்கும் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம், அன்பாகவும் நன்மதிப்புடனும் பழகி வந்துள்ளார். தன்னிடம் வாடிக்கையாளர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய சுரேஷ், ஸ்பிக் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்கவும், அங்குள்ள சிறப்பு மண்பரிசோதனை கூட்டத்தை பார்க்கவும் அனுமதி பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து திருக்கழுக்குன்றம் சுற்றுவட்ட 21 கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகளை தேர்வு செய்து, இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் அனுப்பிவைத்தனர். முன்னதாக ஸ்பிக் நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் எஸ்.நாராயணன் சென்னை விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு ரோஜா பூக்களை கொடுத்து விமானத்தில் செல்ல வழியனுப்பினார். சுரேஷ், 100 விவசாயிகளையும் விமானத்தில் தூத்துக்குடிக்கு அழைத்து சென்றார். அப்போது தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக விமானத்தில் செல்வதாக விவசாயிகள் உற்சாகமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் பலர் தங்கள் நிறுவனத்திற்கு நிரந்தரமான வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், அவர்கள் ஆயிரம் பேரை விமானத்தில் அழைத்து செல்ல விருப்பமுள்ளதாகவும் கூறிய டாக்டர் சுரேஷ், அதன் முதற்கட்டமாக 21 கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகளை தூத்துக்குடி அழைத்து செல்கிறோம் என்றார். அவர்களை வின்னில் பறக்க வைக்க வேண்டும் என்று முயன்றோம் , தற்போது அது நனவாகியிருக்கிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.