ஏற்கனவே தமிழகம் கடனில் இருக்கும் நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பேராசிரியர் ராஜநாயகம் எழுதிய இடக்கரடக்கல் நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை, கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ள முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதில் நல்ல திட்டமே இல்லை என அவர் தெரிவித்தார். ஏற்கனவே தமிழக அரசு கடனில் இருக்கும் நிலையில், ஏன் இலவசத்தை மட்டுமே அறிவிக்கிறார்கள் என சீமான் கேள்வி எழுப்பினார். எனவே இது நல்ல வாக்குறுதி இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யக் கூடிய நிலை இல்லை என கூறிய சீமான், பெண்களின் இலவச பேருந்து பயணத்தை திமுக நிர்வாகிகள் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தனர் என்றும் எனவே இலவசம் இல்லாமல் நல்ல திட்டங்கள் தான் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சீமான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை தேர்தல் நேரத்தில் பேசப்படுவதாகவும் ஆனால் கூட்டணியில் இருப்பவர்கள் தான் இதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று முடிவெடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். எதுவாக இருந்தாலும் ஆட்சி முறையில் மாற்றம் வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துவதாக சீமான் கூறினார்.
மேலும், விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வர இவ்வளவு தாமதம் செய்வது ஏற்புடையதல்ல என்று அவர் சாடினார். கடந்த காலத்தில் யாருடைய திரைப்படத்துக்கும் இதுபோல் சிக்கல் எழுந்ததில்லை என்றும் எனவே படக் காட்சியில் ஆட்சேபனை இருந்தால் காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட தனியாக தான் தேர்தல் களம் காணப் போவதாகவும், யாருடனும் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்றும் சீமான் உறுதி அளித்தார். கூட்டணிக்கு செல்ல அவசியம் இல்லை என குறிப்பிட்ட அவர், சரியானவர்களாக யாரும் இல்லாததால் கூட்டணிக்கான அழைப்புகளை ஏற்பதில்லை, என்றார்.
தேதிமுக தலைவராக இருந்த விஜயகாந்த் கட்சி தொடங்கிய நேரத்தில் 10 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கியை கொண்டிருந்ததாகவும் கூட்டணி அமைத்தால் மக்களிடம் நம்பிக்கையை இழப்போம் என்பதால் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000… ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!! – இபிஎஸ் வாக்குறுதி


