இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழக (MNIT) மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, தற்போதைய IRCTC தளத்தில் உள்ள சில குறைபாடுகளை மாணவர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய தளம் குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். இந்தியாவில் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் சுமார் 88 சதவீதம் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான முன்பதிவு முறையை மாற்றி, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தளத்தில் பயணிகள் தங்களுக்குப் பிடித்த இருக்கையைத் தேர்வு செய்யும் வசதி, கட்டண விவரங்களை காலண்டர் வடிவில் பார்க்கும் வசதி, பல மொழி ஆதரவு உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தற்போது பயணிகள் எதிர்கொள்ளும் கேப்ட்சா (CAPTCHA), ஒருமுறை கடவுச்சொல் (OTP) தாமதம் மற்றும் தட்கல் முன்பதிவின் போது ஏற்படும் சர்வர் நெரிசல் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
புதிய IRCTC தளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் திறன் தற்போதைய அளவை விட ஐந்து மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ரயில் தொடர்பான தகவல்களைத் தேடும் வேகம் பத்து மடங்கு உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட முன்பதிவு முறையின் முக்கிய சிறப்பம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இடம்பெறுகிறது. இதன் மூலம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பை சுமார் 94 சதவீத துல்லியத்துடன் பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனால் பயணத் திட்டமிடல் மேலும் எளிதாகும் என்று ரயில்வே துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய IRCTC இணையதளத்தின் அறிமுகம், ரயில் பயணிகளுக்கு வேகமான, எளிமையான மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த முன்பதிவு அனுபவத்தை வழங்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
