spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்டேன், நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

we-r-hiring

நவம்பர் 15-ஆம் நாள் காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் விடுதியில் என்னை சந்தித்தார். கடந்த ஆண்டு பெரம்பலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியபோது, அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், ‘ரோடு ஷோ’ என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.

தைவானை சேர்ந்த நிறுவனம், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள ஜெயங்கொண்டத்தில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனைச் செயல்வடிவமாக்கும் வகையில் நவம்பர் 15-ஆம் நாள் ஜெயங்கொண்டத்தில் அடிக்கல் நாட்டிடச் சென்றேன்.

அரியலூர் செல்லும் வழியில் வாரணவாசி என்ற ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்தேன். வாரணவாசி அங்கன்வாடியில் ஊட்டச் சத்துப் பெட்டகத்தை வழங்கி, ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பினைத் தொடங்கி வைத்ததுடன், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கான சத்துப் பெட்டகங்களையும் வழங்கினேன். குழந்தைகளின் நலன் காக்கும் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்துவிட்டுப் புறப்படும்போது, வழியில் பலரும் தங்கள் குழந்தைகளை என்னிடம் கொடுத்துப் பெயர் வைக்கச் சொன்னார்கள். திராவிடச் செல்வன், செம்மொழி போன்ற பெயர்களைச் சூட்டினேன்.

அரசு விழாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உங்களில் ஒருவனான என் கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அங்குத் திரண்டிருந்த ஏறத்தாழ 20 ஆயிரம் பேருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றதை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் வாயிலாக உறுதி செய்துகொண்டு, பெரம்பலூருக்குப் புறப்பட்டேன்.

பெரம்பலூர் -அரியலூர் இரு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், அரசுத் திட்டங்களின் நிலை குறித்தும், விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். அரசு சார்ந்த திட்டங்கள், அரசு சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுகளை நிறைவு செய்தபிறகு, இந்த அரசு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைவதற்குக் காரணமான கண்மணிகளாம் உடன்பிறப்புகளுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.

நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ