சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் இன்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனா்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழுவினர் ஐபிஎஸ் அதிகாரி சுமித்சரண், ஜோனல் மித்ரா ஆகியோர் இன்று இரண்டாவது நாளாக கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை நேற்று ஆய்வு செய்தனா். இதன் காரணமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் நேரடியாக வழங்கலாம் என தெரிவித்த நிலையில், நேற்று 30-க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இன்று இரண்டாவது நாளாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நபர்கள் மனுக்கள் வழங்க உள்ளனர்.
தவெக பரப்புரை கூட்டத்தில் உயிரிழப்பு விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழுவினர் ஆய்வு செய்த பின்பு, தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடமான உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டு வருகின்றனர்.


