மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து தனது அறிக்கையில் – மக்களாட்சியையும் ,மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு.
‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமையையும் கிடையாது’ எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டிப்பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது.
கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent) உள்ள போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக UGC அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை. கல்வி சார்ந்த வழிகாட்டிகளை வழங்கக் கூடிய UGC ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறது.
ஒன்றிய அரசின் UGC விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது; யூஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யூஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர்.
மோடி அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என மிரட்டியபோது முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டது. அதன் விளைவுகளை இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேசியக் கல்விக்கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள். இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திராவிட மாடல் அரசு அஞ்சாது! பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.
துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுப்பதோடு கல்வியாளர் அல்லாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்றும் தனது அடிப்படை கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்ட பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது NET/ SET தகுதி பெற்றவர்களோ பேராசியர்கள் ஆகலாம் என யூஜிசி வரைவறிக்கை தெரிவித்திருப்பது கல்வித் துறையைச் சீரழித்து மாணவர்களின் கல்விக் கனவைப் பாழாக்கிவிடும். இதன் ஆபத்தை உணர்ந்துதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த வரைவறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதமும் எழுதினார்.
ஒன்றிய பாஜக அரசின் இந்த செயல் தமிழ்நாட்டின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல். அதனால்தான் நமது மாண்புமிகு முதலமமைச்சர் அவர்கள், “பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் தமிழகத்துடன் இணைந்து இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிராகரித்து சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் ஒன்றிணைந்து, நமது கல்வி நிறுவனங்களின் மீதான மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும்” என்று கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார். அதன்படியே இன்று கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளை காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
விஷ செடியையும், விஷம செயலையும் முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியம். அப்படியே மோடி அரசிற்கு உட்பட்ட UGC-யின் இந்த சர்வாதிகார செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி கூட்டாட்சிக்குக் குழி பறிக்கும் UGC வெளியிட்ட வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனைத் திரும்பப் பெறும் வரை திராவிட மாடல் அரசும், தமிழ்நாட்டு மக்களும் தங்களது எதிர்ப்பில் இருந்து ஒரு நொடியும் பின் வாங்க மாட்டார்கள்.மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மோடி அரசிற்கு எதிராக ஒன்றுபடுவோம். மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை… நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை! என கூறியுள்ளாா்.