மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி மோடி தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை மேடை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ள 70 தொகுதிகளுக்கான பட்டியல் வழங்கப்பட்டது. இதில் 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் 25 லிருந்து 30 தொகுதிக்கு உள்ளாகவே கொடுக்கும் எண்ணத்தில் அதிமுக தலைமை இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வர கூடிய சூழ்நிலையில் தொகுதிகளை இறுதி செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில் அவர்களுக்கு தொகுதி முடிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் ஜனவரி 21 தேதி தமிழகம் வரும் பாஜக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய உள்ளார். இதற்கிடையில் வரும் 23ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதற்குள்ளாக அதிமுக பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைத்து கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க அதிமுக மற்றும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்றவும் திட்டமிடப்பட்டு வருகிறது.



