தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறுவை, கார் மற்றும் சொர்ணவாரி பருவங்களில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதம், மேட்டூர் அணைக்கு குறைந்த நீர்வரத்து மற்றும் ‘எல் நினோ’ தாக்கம் காரணமாக குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. தற்போது மேட்டூர் அணையில் 79.56 அடி நீர்மட்டம் மற்றும் 41.52 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பதால், வழக்கம்போல் ஜூன் 12-ஆம் தேதி அணையைத் திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி பருவ நெல் சாகுபடியை விரிவுபடுத்தவும் இந்த சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் மானியம் மற்றும் புதிய நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேளாண் பொறியியல் துறை மூலம் 10 கோடி ரூபாய் செலவில் 2.325 கிலோமீட்டர் நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதேபோல், நீர்வளத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளில் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்தத் திட்டம் மூலம் இயந்திரமயமாக்கல், நீர் சேமிப்பு, தரமான விதைகள் பயன்பாடு ஆகியவை அதிகரித்து, நெல் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் உயர்வதுடன், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பும் மேலும் வலுப்பெறும் என அரசு தெரிவித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் – “யார் அந்த மேலிடம்?” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?
