
தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த நிலையில், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சொந்த ஊர்களுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது என மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு எப்போது என்கிற கேள்வியும் பெற்றோர்களிடத்தில் எழுந்துள்ளது. காரணம் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள மாணவர்கள் திரும்பிவர வேண்டும் என்பதால் முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாலும், கோடை வெயில் தணிந்துள்ளதாலும், பள்ளி திறப்பில் மாற்றமில்லை என்றும், திட்டமிட்டபடியே ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் , அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “2025-26ஆம் புதிய கல்வி ஆண்டில் 2.6.2025 (திங்கள் கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.