Homeசெய்திகள்தமிழ்நாடுமாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

-

மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில், மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் 95 ஆண்டுகளாக தொழிலாளர்கள் அங்கேயே தங்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலப்பகுதிகளில் காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து கூலி வேலைகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களால் உருவானது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். இதில் பணியாற்றுகிற 80 சதவிகிதத்தினர் பட்டியலினத்தைச் சார்ந்த ஏழை எளிய தொழிலாளர்களாவார்கள்.

இவர்களது வாழ்வாதாரமே மாஞ்சோலை எஸ்டேட்டை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 8373 ஏக்கர் மற்றும் அம்பை பகுதியில் அமைந்துள்ள 23,000 ஏக்கரையும் காப்பு காடாக கடந்த 28.2.2018 இல் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாத இறுதிக்குள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு அனைவரும் வெளியேற வேண்டுமென எஸ்டேட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஐந்து தலைமுறைகளாக இந்த மலைப் பகுதியில் வாழ்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த இவர்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடோ, வீட்டு மனையோ இல்லாமல் நிராயுதபாணிகளாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு பாரம்பரியமான தோட்ட தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது.

selva perunthagai

இத்தகைய பின்னணியில் உள்ள தொழிலாளர்களை திடீரென வெளியேற்ற முற்படுவது அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட அகதிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திருக்கிறோம். அதுபோல, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு தேயிலை தோட்ட தொழிலையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

MUST READ