செந்தில் பாலாஜி கைது- உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். 17 மணி நேர சோதனைக்கு பிறகு நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை வழங்கவில்லை என திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைது தொடர்பான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக அறிவிக்க திமுக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.