spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுSIR - திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த கொண்டுவரப்பட்ட ஒரு ஆயுதம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

SIR – திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த கொண்டுவரப்பட்ட ஒரு ஆயுதம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

திமுகவை கொள்கை ரீதியாக வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில், திருட்டுத்தனமாக வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.SIR - திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த கொண்டுவரப்பட்ட ஒரு ஆயுதம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டி வள்ளுவர்கோட்டத்தில் இளைஞர் அணி சார்பில் ”அறிவு திருவிழா” சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முக்கிய உறையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா். மேலும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார்.

we-r-hiring

திமுகவின் 75வது அறிவுத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அவர்,  அறிவு திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என உதயநிதியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிவித்தாா்.  உதயநிதியை ‘கொள்கை இளவல்’ என குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார். மேலும், திமுகவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை எனவும், திமுக போல் வெல்ல வேண்டும் என்றால் இக்கட்சியை போல அர்ப்பணிப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

இவ்விழாவிற்கு அறிவு திருவிழா என்று துணை முதலமைச்சர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளாா். அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை. அறிவு திருவிழாவுக்கான பணிகளை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளாா். நான் நினைத்ததை விட சிறப்பாக அறிவு திருவிழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இளைஞர்களை கட்சிக்குள் கொண்டுவந்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி என கூறிய முதலமைச்சர், இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்டாா். மேலும், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-இல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

“ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்” என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள், எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை கொள்கை வகுப்பெடுக்கும் நாடகங்கள், திரைப்படங்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள்,எத்தனை துரோகங்கள், தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல.

மேலும், கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில், திருட்டுத்தனமாக வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தபோதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் நடத்துகின்றனர்.

தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஐ.ஆரை ஏன் அவசரம் அவசரமாக நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளாா். இந்த நேரத்தில், இளைஞரணித் தம்பிமார்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும் என்று கூறினாா்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் பேசும், சமூகநீதி,சுயமரியாதை மாநில சுயாட்சி,  கூட்டாட்சி ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது.  “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

திமுகவின் கூட்டம் கூடி கலையும் கூட்டம் அல்ல. எத்தனை பெரிய கூட்டங்கள் வந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. திமுகவின் வரலாறு தெரியாமல் மிரட்டி பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. திராவிடம் வெல்லும்; அதை காலம் சொல்லும்; இது கூடி கலையும் கூட்டம் அல்ல; காலம் தோறும் கூர்தீட்டும் கூட்டம்.

இந்தியாவின் ஜனநாயகத்தையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும். “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்” தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், தலைவர் கலைஞரின், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!  என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!

MUST READ