தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
பேரவையில் 13-ம் தேதிமுன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
14-ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த 2 அரசினர் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
15-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் பதிலுரை அளித்தார்.
19-ம் தேதி பொது பட்ஜெட்டும் ,20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 21-ம் தேதி நடந்தது.
இதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பதில் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக 22ம் தேதி பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று திரும்ப பெறப்பட்டதை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “வரும் ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு துறை ரீதியான மனியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் துவங்கும் என தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும் , எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24 ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவலர் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு செய்யப்படும் என்றார்
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சட்டபேரவை கூட்டத்தொடர் கூடுவதால் , மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்வது, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.