இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட தொடர்ந்து தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வரக்கூடிய நிலையில் சிவகளையில் கிடைக்கப்பெற்ற இரும்பு பொருட்களின் காலம் 5300 ஆண்டுகள் பழமையானது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இச் செய்தி தொகுப்பு.
தொல்லியல் துறையின் அகழாய்வுகள் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 39 கோடி ரூபாய் செலவில் கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு, அடிக்கல் நாட்டினார். மேலும், கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து இரும்பின் தொன்மை என்ற நூலையும் வெளியிட்டார். இந்த நிகழ்வு நடைபெற்ற அரங்குக்கு வெளியே சிவகளை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை போன்ற இடங்களின் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டது. இதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தொல்லியல் ஆய்வாளர்களும் கண்டு ரசித்தனர். அதோடு தமிழக வரலாறு தங்களை வியப்பூட்டுவதாகவும் இவ்வளவு பழமை வாய்ந்த வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் இருப்பது தங்களுக்கு பெருமை சேர்ப்பதாகும் மாணவர்கள் கூறினர்.
சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் அகழாய்வுகள் கிடைக்கப்பெற்ற இடங்களிலே பொதுமக்கள் நேரடியாக பார்க்கக் கூடிய வகையில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 4.48 ஏக்கர் பரப்பளவில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட உள்ளது.
அதோடு, கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளவும் பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்டுகளிப்பதற்காக மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டு கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி அருங்காட்சியகத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம்.
மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலைநாடுகளுடனும், கீழைநாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் இராஜேந்திர சோழனால் (கி.பி. 1012 — 1044) சோழர்களின் தலைநகரமாக நிறுவப்பட்டது. இவ்வூரில் அரண்மனை அமைந்திருந்ததாகக் கூறப்படும் மாளிகைமேடு அகழாய்வுத் தளத்தில் செங்கல் கட்டுமானங்கள், கூரை ஓடுகள், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், செப்புக் காசுகள், செலடன் மற்றும் போர்சலைன் வகை சீனப்பானை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்பொருட்கள் தொடர் அகழாய்வுகளின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இங்குள்ள கட்டுமான எச்சங்களும், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனையின் அடித்தளத்தை உறுதிப்படுத்துகின்றன. சீனப்பானை ஓடுகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சீன நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை நிலைநிறுத்துகிறது.
இதை செயல்படுத்தும் விதமாக தொடர் அகழாய்வுகளின் மூலம் பெறப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் மன்னர் இராஜேந்திர சோழன் அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பு ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த விழாவிலேயே முதலமைச்சர் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அப்போது பேசிய முதலமைச்சர் இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல – உலகுக்கே நான் அறிவிக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக – இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல -உலகுக்கே நான் அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கி இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டஅகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம் என்றார்.
இந்த அறிவிப்பு குறித்து கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திலீப் குமார் சக்ரவர்த்தி, தமிழ்நாட்டில் உள்ள சிவகளை தொல்லியல் அகழாய்வு கிடைக்கப் பெற்ற பொருட்கள் முறையாக உலக தரத்திலான ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதால் நூறு சதவீதம் சரியான முடவுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
அதோடு, இரும்பின் தொன்மை புத்தகத்தை வடிவமைப்பு செய்த தமிழகத்தின் தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர் ராஜன் மற்றும் டாக்டர் சிவானந்தம், மயிலாடும்பாறை அகழாய்வு படி 4200 ஆண்டு என்றால் சிவகளையில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாடு மட்டுமின்றி இரும்பு உருவாக்கும் தொழில்நுட்பமும் நம்மிடையே இருந்துள்ளது. இன்னும் ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. இந்திய வரலாற்றில் இரும்பை முதன்முதலாக பயன்படுத்தியது தமிழினம் என்பதும் உறுதியாகி உள்ளது என்றனர்.
தமிழ் குடி மூத்த குடி தான் என்பதற்கான ஆதாரங்களை தொல்லியல் அகழாய் மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் இதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அகழாய்வு செய்வதோடு உலக தரத்தில் இருக்கக்கூடிய ஆய்வகங்களில் தொல்பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தான் நமக்கு இதுபோன்ற முடிவுகள் கிடைக்கப் பெறுவதாக நிதித் துறை செயலாளரும், தொல்லியல் துறை ஆணையருமான உதயச்சந்திரன் கூறினார். மேலும் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி பயன்படுத்தி உள்ளதாகவும், விவசாயம் செழிப்படையக்கூடிய வகையில் செயல்பட்டு இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக இந்த முடிவுகள் இருப்பதாக கூறினார்.
2,600 ஆண்டுகளுக்கு முன்பே நவீன கட்டமைப்புகளோடு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழடி அகழாய்வு உள்ளது. இந்த நிலையில் நான்காயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக இரும்பை தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் மயிலாடும்பாறையில் கிடைத்த நிலையில், தற்போது 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பை உருக்கி தொழில்நுட்ப ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது இன்னும் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஆதாரமாக மாறியிருக்கிறது.
இதன் மூலம் தமிழ்குடி மூத்தகுடி என்பதை மீண்டும் உறுதி செய்யக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகளின் முடிவுகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்